கோவிட்-19 பரவல் காரணமாக, ஓட்டல் விடுதிகளை முன்பதிவு செய்ய உதவும் நிறுவனமான ஓயோ நிறுவனம், தனது ஊழியர்களுக்குச் சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அதன் நிறுவனர் ரிதேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கோவிட்-19 பரவல் தொடர்ந்து தீவிரமடைவதால், உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை நிறுவனம் மேற்கொள்கிறது.
அதன்படி, மே 12 தொடங்கி பணியாளர்கள் வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும். மேலும், தேவைப்படும் போது மேலாளர்களிடம் தெரிவித்து பணியாளர்கள் விடுப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான காரணங்கள் ஏதும் தேவையில்லை. தேவையற்ற அழுத்தங்களை நிறுவனம் தராது.
நானும், எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவுள்ளேன். இந்த சோதனையிலிருந்து விரைவில் மீண்டுவருவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஓயோ நிறுவனம் 80 நாடுகளில் 800 நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ’வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ சர்வீஸ் காலம் நீட்டிப்பு’ - டாடா நிறுவனம்