கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் தற்போது நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இந்த அசாதாரண நிலையைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்துவருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதிகரிக்கும் சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் 'உரிய' நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கடந்த நான்கு ஆண்டுகளாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த கார்ப்பரேட் விவகாரத் துறை மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 1,600-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் சுமார் ரூ. 7,361 கோடியை (1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் இருக்கும் 46 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடுகளைப் பெற்றுள்ளன. அவற்றில், ஆட்டோமொபைல், புத்தகங்களை அச்சிடுதல், மின்னணு, மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட துறைகள் சீனாவிலிருந்து தலா 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றன.
ஆட்டோமொபைல் துறை அதிகபட்சமாக சீனாவிடமிருந்து 172 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சேவைத் துறை 139.65 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடுகளாகப் பெற்றுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீன அரசு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து எவ்வித தரவுகளையும் சேமிக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் 70 ஆயிரம் பேருக்கு வேலை - பிளிப்கார்ட் அதிரடி!