மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முடிவடைந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், அரசின் நிதி வளத்தை பலப்படுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்றார். வரும் 2024-25ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்தும் லட்சியத்தில் தயார் செய்யப்பட்ட பட்ஜெட், எனவே உட்கட்டமைப்பில் அதிக முதலீடு, அந்நிய நேரடி முதலீடு, வங்கி சீரமைப்புக்கு 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், அரசின் நிதிப்பற்றாக்குறையை சமாளித்து நிதி வருவாயைப் பெருக்கும் நோக்கிலேயே பெட்ரோல், டீசலுக்கு 2 ரூபாய் கூடுதல் வரித்தொகை விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் மூலம் 24 ஆயிரம் முதல் 28 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றார். அத்துடன் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்தவை, எந்தவித போலி புள்ளிவிவரங்களும் குறிப்பிடப்படவில்லை என விளக்கமளித்தார்.
நிதியமைச்சரின் பதிலுக்கு முன்பாக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.