உலகெங்கும் தற்போது பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் கார்களுக்கு பதில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது.
முன்னதாக அந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘மாடல் S’ வகை எலக்ட்ரானிக் கார்கள் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘மாடல் y’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் கார் வகையை வடிவமைப்பதில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுவந்தது.
கோவிட் - 19 பரவல் காரணமாக இதன் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏழு இருக்கைகளைக் கொண்ட புதிய மாடல் y எலக்ட்ரிக் கார் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். அதன் உற்பத்திப் பணிகளில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள் களையப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த மாடல் y எலக்ட்ரிக் கார் டெஸ்லா வரலாற்றிலேயே அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.