இந்தியாவில் ஆற்றல், விமான நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து துறை சார்ந்த பராமரிப்புப் பணிகளைச் செய்துவரும் நிறுவனம் ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி (GVK) குழுமம். இந்நிறுவனம், சுமார் 705 கோடி ரூபாயை முறைகேடாகச் சம்பாதித்ததாக குற்றஞ்சாட்டி ஜிவிகே நிறுனத்தின் மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட், ஜிவிகே ஆகிய நிறுவனங்கள் மீது பண மோசடி வழக்கு பதிவுசெய்தது. 2006ஆம் ஆண்டு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து ஜிவிகே குழுமம், மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இந்தப் புதிய நிறுவனத்தின் 50.5 விழுக்காடு பங்குகளை ஜிவிகே குழுமம் வைத்திருந்தது.
இந்நிலையில், விமான நிலையத்தை நவீனமயமாக்குவது, செயல்பாடு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆண்டுதோறும் மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனம் தனது வருவாயில் 38.7 விழுக்காட்டை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.
இருப்பினும், 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விமான நிலையத்தின் வருவாயைக் குறைத்துக்காட்டியும் செலவுகளை அதிகரித்துக்காட்டியும் சுமார் 705 கோடி ரூபாய் வரை மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனம் சம்பாதித்துள்ளது.
முறைகேடாக ஈட்டப்பட்ட வருவாயை ஜிவிகே குழுமம், தனது பிற நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறையும் மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (MIAL), மற்றும் ஜிவிகே குழுமம் ஆகியவற்றின் மீது பண மோசடி வழக்கைப் பதிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை