2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்) அரசு நிர்ணயித்த இலக்குகளை அடைந்துள்ள போதிலும், திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் காரணமாக Non Performing assests (NPA) எனப்படும் வாராக்கடன்கள் அதிகரித்துள்ளது வங்கித் துறையினரை கவலைக்குள்ளாக்குகிறது.
இத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திருப்பிச் செலுத்தப்படுவது இல்லை என்று எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எம்.கே. ஜெயின். இதனால் இத்திட்டத்தில் கடன் வழங்கும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
துணை ஆளுநரின் இந்த எச்சரிக்கை, கடன்களைப் பெறும் வர்த்தகர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை வங்கியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் உணர்த்துகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்களும் வாராக்கடன்களில் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குக் கொடுக்கும் கடன்கள் வங்கித் துறையில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தார். அவரது இந்த கருத்து வங்கித்துறையிலும் அரசிலும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், முத்ரா திட்டத்தின் கீழ் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் சுமார் 21 கோடி பயனாளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் வியாபாரத்தை வளர்த்துள்ளனர்.
இருப்பினும், வாராக்கடன் 2016-17ஆம் ஆண்டு ரூபாய் 5,067 கோடியாகவும் 2017-18ஆம் ஆண்டில் ரூபாய் 7,277 கோடியாகவும், 2018-19ஆம் ஆண்டு ரூபாய் 16,481 கோடியாகவும் இருந்தது, இது இந்த நிதியாண்டில் மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் பொதுத்துறை வங்கிகளில் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் இந்த வாராக்கடன்கள் அதிகமாக உள்ளது. அதை தொடர்ந்து பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியும் இந்த பட்டியலில் உள்ளது . 2017-18ஆம் நிதியாண்டில் 2.58ஆக இருந்த திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் சதவிகிதம் 2018-19 நிதியாண்டில் 2.68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
முத்ரா கடன் பட்டியல்
பண மதிப்பிழப்பு வணிகர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியும் வணிகர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியது.
இதனால், கோடிக்கணக்கான வர்த்தகர்கள் தங்கள் வேலையை இழந்தனர். அதேபோல் திரும்பச் செலுத்தப்படாத கடன்களும் அதிகரித்தது. மாறிவரும் சந்தையின் போக்கை கணிக்க முடியாததால் ஷிஷு திட்டத்தின் கீழ் ரூ.50,000க்கு கீழ் கடன் வாங்கிய பல சிறு மற்றும் புதிய வர்த்தகர்கள், தங்கள் தொழிலை லாபகரமாக நடத்த முடியாமல் போனாது.
கடன் பெற்ற உற்பத்தித் துறையிலிருக்கும் சிறு வணிகர்கள் முறையாக கடனை செலுத்தியபோதும், அவர்களால் சர்வதேச அளவிலான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் போனது. சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்கள் மலிவான விலையில் இருந்ததே இதற்கு காரணம். சிறு மற்றும் குறு வணிகர்களின் பொருள்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல வியாபாரம் ஆகாததால் அவர்களாலும் கடனை கட்ட இயலவில்லை.
இதுபோல இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை அரசு வசூலித்த போதிலும், அவை சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் எடுத்துவரப்படுவதால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் சிறு மற்றும் குறு வணிகங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் நிர்பந்தத்தால் சில வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.
உடனடி வழிமுறைகள்
ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகள் திரும்பச் செலுத்தப்படாத கடன்களை ஆராய்ந்து உடனடியாக கடன் வழங்கும் நடைமுறைகளில் தேவையான மாற்றத்தை பின்பற்ற வேண்டும். எஸ்.கே. சின்ஹா குழு பரிந்துரைத்தபடி, சஷி, கிஷோர் மற்றும் தருண் திட்டங்கள் கீழ் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த வேண்டும்.
திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் அதிகரிப்பால் மட்டுமே சிறு குறு வர்த்தகர்கள் வழங்கப்படும் கடனை ரிசர்வ் வங்கி தவிர்க்க முடியாது. வழங்கப்பட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதற்கும் அதிகரிக்கும் Non performing assests-ஐ குறைக்கவும் கடன் வழங்குவதில் புதிய திட்டத்தை பின்பற்றவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் அதிகாரம் அளிக்கவேண்டும்
திரும்பச் செலுத்தப்படாத கடன்களை மீட்டெடுப்பதிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவை வாராக்கடன்களாக மாறும் அபாயமும் உள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க பொதுத்தறை வங்கிகள் உரிய திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பிரச்னைக்குரிய கடன்களை வங்கிகள் உரிய முறையில் ஆராய வேண்டும். இல்லையென்றால், அவை வாராக்கடனாக மாறிவிடும். சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு உதவ, கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய திட்டத்தை அமல்படுத்த வங்கிகள் தயாராக வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படும் சிறு குறு வணிகம் உரிய வளர்ச்சியை அடைய அரசும் ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளும் உதவ வேண்டும். முத்ரா திட்டத்தில் பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, கடன் வழங்க வங்கிகளுக்கு முழு சுதந்திரத்தை தரவேண்டும்.
12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிய 5.77 கோடி சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக் கொள்ள உதவும் அதே நேரத்தில் தேசிய பொருளாதாரத்தில் வாராக்கடன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராயவேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் அலட்சியம்
முத்ரா கடன்களை வசூலிப்பதில் பொதுத்துறை வங்கிகள் காட்டும் அலட்சியம் ஒவ்வொரு ஆண்டும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுத்த கடனை வசூலிப்பதில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ள சிறு குறு வணிகர்களையும் பாதிக்கின்றன. பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துவருகிறது, இது போல் ஏற்படும் வாராக்கடனும் நாட்டுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.