இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்வது மாருதி சுசூகி. இந்திய வாகன உற்பத்தி சந்தையில் சுமார் 50 விழுக்காட்டிற்கு மேலான உற்பத்தி, மாருதி சுசூகி நிறுவனத்திடம் உள்ளது. இருப்பினும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும், கோவிட்-19 தொற்று காரணமாகவும் இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தியும் விற்பனையும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் மே மாத விற்பனை 86.23 விழுக்காடு குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மே மாதம் முழுவதும் வெறும் 18,539 கார்களை மட்டுமே மாருதி நிறுவனம் விற்பனை செய்யதுள்ளது. கடந்தாண்டு மே மாதம், அந்நிறுவனம் 1,34,641 கார்களை விற்பனை செய்திருந்தது.
குறிப்பாக உள்நாட்டில், கடந்தாண்டு 1,25,552 கார்களை மாருதி சுசூகி விற்பனை செய்திருந்தது. இந்தாண்டு உள்நாட்டு விற்பனை 88.93 விழுக்காடு குறைந்து 13,888ஆக உள்ளது. ஏற்றுமதியும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 48.83 விழுக்காடு குறைந்து 9,089ஆக உள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி முதல் மானேசர் தொழிற்சாலையும், மே 18ஆம் தேதி முதல் குருகிராம் தொழிற்சாலையும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இதேபோல ஹூண்டாய், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் சுமார் 80 விழுக்காடுவரை சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் மாதம் வரை சேவையை நீடித்த மாருதி!