கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் இணைய வர்த்தகச் சந்தையானது அபரிமிதமாக வளர்ந்துள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்துவிதமான பொருட்களையும் அதிரடி சலுகை விலையில் விற்பனை செய்யத்தொடங்கின. குறிப்பாக மின்னணு சாதனங்கள் விற்பனையானது இணையதள விற்பனையில் பெரும் பங்கு வகிக்கிறது.
அமேசான் போன்ற இணையதள நிறுவனங்களின் வளர்ச்சியின் பக்கவிளைவாக இந்தியாவின் சிறு, குறுத் தொழில் துறையின் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற நடவடிக்கைககளால் சிறு, குறு வணிகர்கள் தவித்துவரும் நிலையில் இணைய வர்த்தகப் போட்டியையும் சமாளிப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும்வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், 'அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான், சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்ற நிறுவனங்களுடன் இந்தியாவின் சிறு, குறு வர்த்தகர்கள் போட்டிபோடும் வகையில் புதிய வர்த்தக இணையதளத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு தொடங்கவுள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும், இரண்டாண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் வருவாய் ஈட்ட முடிவுசெய்துளோம்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு சிறு, குறு வணிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் சில நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.