பத்துக்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நாளை பொது அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்திவரும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும், இந்த பொது அடைப்பில், சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள பாரத் பந்தில் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது எனவும், நிர்வாகத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் செயல்பட பொதுத்துறை நிறுவனங்களை உறுதிபடுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும், அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஊழியர்களுக்கு அவசர விடுப்பைத் தவிர, வேறு எந்தக் காரணத்திற்கும் விடுப்புகளை அளிக்கக் கூடாது எனவும் அமைச்சகம் சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மயம், அந்நிய நேரடி முதலீடு, தொழிலாளர் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி, நாடு முழுவதும் மத்திய பொதுத்துறை சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்