கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்று இருப்பதால் மார்ச் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
ஊரடங்கால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அரசின் வருவாய் முற்றிலும் முடங்கியது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை சமீபத்தில் உயர்த்தியது. அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது.
அதன்படி பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய், சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான கலால் வரி 5 ரூபாய் சாலை செஸ் வரி 8 ரூபாய் என மொத்தம் 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 32.98ஆகவும் டீசல் மீதான ஒட்டுமொத்த கலால் வரி ரூ. 31.83ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும்போது பெட்ரோல் மீதான வரி ரூ. 9.48ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.56ஆகவும் இருந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் மீதான விலையை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளும் என்பதால் இந்தக் கூடுதல் வரி விதிப்பின் மூலம் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏற்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலையைவிட குறைவாக விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள்!