கடந்த புதன்கிழமை வங்கி நிர்வாகங்களுக்கும் வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் சுமார் மூன்று ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ஊதிய உயர்வு திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி ஊழியர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு திருத்தம், 2017ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நிலுவையில் உள்ள ஊதிய சிக்கலைத் தீர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதன்படி, ஊதிய திருத்தம் 2017, நவம்பர் 1 முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்திர ஊதியம் மற்றும் படிகள் (allowances) ஆண்டுக்கு 15 விழுக்காடு உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ரூ.7,898 கோடி கூடுதலாகச் செலவாகும். முன்னதாக, 2012ஆம் ஆண்டு வங்கி ஊழியர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஊதிய உயர்வு 2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், வங்கி ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது குறித்து வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளும் இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுப்பார்கள்.
அதேபோல வங்கி ஊழியர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு என்பது 2017ஆம் ஆண்டு இருந்த செலவினங்கள் அடிப்படையில் தனியாகக் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை அளிக்கும் பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு இடையில் இருக்கும் கடுமையான போட்டியைக் கருத்தில்கொண்டு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகையை அமல்படுத்த வேண்டும் என்றும் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. “செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) தனிப்பட்ட வங்கியின் இயக்க / நிகர லாபத்தைப் பொறுத்து இருக்கும்” என்றும் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சாதாரண சம்பளத்திற்கு மேல் ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையைக் கணக்கிட வேண்டிய முறைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பொதுத்துறை வங்கியின் இயக்க லாப வளர்ச்சி ஆண்டுக்கு ஐந்து விழுக்காட்டிற்கும் கீழ் இருந்தால், அந்த வங்கியின் ஊழியர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் எவ்வித ஊக்கத்தொகையும் கிடைக்காது.
பொதுத்துறை வங்கியின் இயக்க லாப வளர்ச்சி ஆண்டுக்கு ஐந்து முதல் 10 விழுக்காட்டிற்குள் இருந்தால், வங்கி ஊழியர்களுக்கு ஐந்து நாள்களுக்கான (அடிப்படை ஊதியம்+படி) ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அதேபோல பொதுத்துறை வங்கியின் இயக்க லாப வளர்ச்சி ஆண்டுக்கு 10 முதல் 15 விழுக்காட்டிற்குள் இருந்தால், வங்கி ஊழியர்களுக்கு 10 நாள்களுக்கான (அடிப்படை ஊதியம்+படி) ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும், பொதுத்துறை வங்கியின் இயக்க லாப வளர்ச்சி ஆண்டுக்கு 15 விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், வங்கி ஊழியர்களுக்கு 15 நாள்களுக்கான (அடிப்படை ஊதியம்+படி) ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வங்கியின் பங்களிப்பு உயர்த்தப்படும்
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்.பி.எஸ்.) வங்கியின் பங்களிப்பை 10 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக உயர்த்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இது ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதியில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படும், மேலும் இதற்கு அரசின் ஒப்புதலும் பெற வேண்டும்.
இவை குறித்த இறுதி முடிவுகளை எடுக்க மூன்று மாதங்களுக்குள் மீண்டும் இதேபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று வங்கிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனிநபர் கடனா / தங்க நகைக்கடனா... சிறந்த கடன் திட்டம் எது?