கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 23.9 விழுக்காடு குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி மிகக் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில்தான் கரோனா சிகிச்சைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. இதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
ஆனால், அரசு தளர்வு பற்றிய அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியதும் பொருளாதாரக் குறியீடுகள் வளர்ச்சியடையும் என்பதையே காட்டுகின்றன.
வரும் பண்டிகை காலத்தில் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இந்த நிதியாண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும்.
இருப்பினும், முதல் காலாண்டில் ஜிடிபி பெரிய அளவில் சரிந்துள்ளதால், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோதான் இருக்கும்" என்றார்.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அரசின் செலவுகளை உயர்த்தும் நடவடிக்கைகளில் அரசு தற்போது ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே திரையரங்குகள் செல்ல விருப்பம் - ஆய்வில் தகவல்