உலகின் பல்வேறு நாடுகளிலும், கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்கள் பெரும்பாலான நேரங்களை ஸ்மார்ட்போன்களிலும், இணையத்திலுமே கழிக்கின்றனர்.
குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு கணிசமாகவே உயர்ந்துள்ளது. வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்கக் கிடைத்துள்ள இந்த நேரத்தில் பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், தனது பயனாளர்களின் பேஸ்புக் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையில், "Quiet Mode" என்ற புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்தினால் வரும் புஷ் நோட்டிபிகேஷன் (push notifications) அனைத்தும் பிளாக் செய்யப்பட்டுவிடும். இதனால் எவ்வித தொந்தரவும் இன்றி குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க முடியும். மேலும், பேஸ்புக்கில் ஒரு பயனாளர் என்ன மாதிரியான விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் வசதியும், பயனாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் "Your Time on Facebook" என்ற இடத்திற்குச் சென்று, இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.