நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், கரோனா அச்சத்தால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில், அரசின் வரி வருவாயைப் பெருக்கும் நோக்கில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உபகரணங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்படும் நிலையில், அதன் உதிரிபாகங்களுக்கு 18 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. தீப்பெட்டி பொருட்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
சரக்குகள் ஒருமாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதை கண்காணிக்கவும், வரிசெலுத்தாமல் ஏமாற்றுவதை களையும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாஸ்ட் டேக் தொழில்நுட்பத்துடன் ஜிஎஸ்டியின் இ-வே பில்லிங் சிஸ்டத்தை இணைக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கும் லாட்டரி முறையை அடுத்த மாதம் முதல் அமல்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜிஎஸ்டி வரி செலுத்தும் இணையத்தில் உள்ள பிரச்னைகளை களைவது, ஜிஎஸ்டி வரியில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகையில் தாமதம் நிலவுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவைகள் ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
ஏனெனில் தாமதமாக பணம் செலுத்துவதற்கான வட்டி நிகர வரி பொறுப்பில் மட்டுமே வசூலிக்கப்படும். இந்தப் புதிய வரி விதிப்பு விகிதங்கள் வரும் (ஏப்ரல்) 1ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. இதேபோல் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு 'ஜி.எஸ்.டி.ஆர்-9சி' கணக்கு தாக்கல் படிவம் சமர்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் 2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி. கணக்கு தாக்கல் கெடு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18, 2018-19 நிதியாண்டில் இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு காலதாமத கணக்கு தாக்கலுக்கான அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12%-லிருந்து 18%-க்கு உயரும் மொபைல் ஜிஎஸ்டி! - அதிரடி காட்டும் மத்திய அரசு