கரோனா வைரஸ் காரணமாக பல தரப்பு மக்களும் தங்கள் வருவாயை இழந்து தவித்துவருகின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் பலரும் வங்கிகளிலிருந்து தாங்கள் பெற்ற கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கியில் பெற்ற கடன்களுக்கான மாத தவணையை (EMI) திரும்பச் செலுத்த வங்கிகள் மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கி இதனை உத்தரவாக பிறப்பிக்காமல், வங்கிகளுக்கு பரிந்துரையாக வழங்கியிருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
புதிய மாதம் தொடங்க இன்னும் ஒரு நாள்கூட இல்லாத நிலையில் பல வங்கிகளும் இது குறித்து எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் சில வங்கிகள் EMI-ஐ திரும்பச் செலுத்தும் நினைவூட்டி குறுந்தகவல் அனுப்பியது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல்வேறு வங்கிகளும் இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யுகோ வங்கி, சிண்டிக்கேட் வங்கி, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் இச்சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளன.
மார்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய வீட்டு, வாகன, தனிநபர் கடன், சிறு, குறு, நிறுவன கடன், விவசாயக் கடன்களுக்கான தவணைகளுக்கு இச்சலுகை வழங்கப்படுள்ளது. சில வங்கிகள் பெரு நிறுவன கடன்களும் இந்தக் கால நீட்டிப்பை வழங்குகின்றன. கிரெட் கார்டு என்று அழைக்கப்படும் கடன் அட்டைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் தவணையை திரும்ப செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்கும் சலுகைகளை அனைவருக்கும் கட்டாயமாக கொடுத்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்களிடம் பணமிருந்தாலும் அவர்களால் தவணையை செலுத்த முடியாது.
இருப்பினும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த தகவல்கள் முறையாக தெரிவிக்காததால் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பலராலும் வங்கிக் கிளைகளுக்குச் சென்று இது குறித்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடன்களுக்கான தவணை செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியின் இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம். அதில் தகவல் இடம்பெறவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் வங்கிகளின் இலவச எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்.
இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!