நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மந்தநிலை நிலவிவருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். அதன் தாக்கம் ஆட்டோமொபைல் துறையில் நேரடியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் தொடர்ந்து எச்சரித்தனர்.
அதேபோல சமீப காலங்களில் டிவிஎஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைப் பல நாள்கள் நிறுத்திவைத்திருந்தன.
இந்நிலையில் விவசாயம், உற்பத்தித் துறையில் முக்கிய வாகனங்களாகக் கருதப்படும் டிராக்டர், சிறிய ரக சரக்கு வாகனம் (மினிடோர்), லாரிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்திவரும் அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது ஐந்து தொழிற்சாலைகளில் வேலையில்லா நாட்கள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எண்ணூர் தொழிற்சாலையில் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலையில் 5 நாட்களும், பந்த்நகர் தொழிற்சாலையில் 18 நாட்களும், ஆல்வார் மற்றும் பண்டாரா தொழிற்சாலைகளுக்கு 10 நாட்களும் வேலையில்லா நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.