சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய சில்லறை வர்த்தகச் சந்தையைப் பிடிக்க பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆன்லைன் விற்பனை தற்போது கரோனாவால் அதிகரித்துள்ளதால், இதைப் பயன்படுத்தி இந்திய சில்லறை வர்த்தக சந்தையைப் பிடிக்க அமேசான் நிறுவனம் முயன்றுவருகிறது.
இந்தியாவில் வளர்ந்துவரும் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும், ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான ப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் அமேசான் நிறுவனம் கடந்தாண்டு 49 விழுக்காடு பங்குகளை ரூ.1,431 கோடிக்கு வாங்கியிருந்தது.
இந்த ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனம், சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் 7.2 விழுக்காடு பங்குகளை கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால், ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் சுமார் 5 விழுக்காடு பங்குகளை மறைமுகமாக அமேசான் வைத்திருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் கடைகளுடன் சில்லறை வர்த்தக சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக திகழும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இது கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், ஃப்யூச்சர் குழுமத்தின் மொத்த ரீடெய்ல் பிரிவையும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.24,713 கோடிக்கு விற்க உள்ளதாக ஃப்யூச்சர் குழுமம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.
ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை விற்கும் முன், அமேசானிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் (right of first refusal) என்று போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அமேசான், இதற்கு எதிராக சிங்கப்பூர் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரிலையன்ஸ் - ஃப்யூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தார்.
இந்நிலையில் ஃப்யூச்சர் குழுமம் செபிக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "அமேசான் நிறுவனம் எங்களிடம் ரூ.1,401 கோடி மற்றும் அதற்கான வட்டியை இழப்பீடாக கோரியுள்ளது. இந்த இழப்பீடு அங்கீகரிக்கப்பட்டாலும் அதை சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் அளிக்கும். இதனால், எங்கள் நிறுவன்திற்கு பொருளாதார ரீதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும், எங்கள் பரிவர்த்தனையை செபி பரிசீலனை செய்யக் கூடாது என்று தீர்ப்பாயம் உத்தரவிடவில்லை. எங்களுக்கும் அமேசான் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் ரீதியில்தான் பிரச்னை எழுந்துள்ளது. எனவே, இந்த பரிவர்த்தனையை செபி பரிசீலனை செய்ய தொடங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாவது காலாண்டில் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாபம் 5 சதவீதம் உயர்வு!