இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, இந்திய ரயில்வேயுடனான தன் உடன்படிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும், 55 ரயில்வே பாதைகளின் வழியாக தன் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து பொருட்களை வழங்க வழிவகை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, நகரங்களுக்கு இடையே 13 வழித்தடங்களில் வணிகப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அமேசான் இந்தியா, இந்திய ரயில்வேயுடன் உடன்படிக்கை செய்திருந்தது.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை ஒட்டி இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் தன் வணிகப் பொருள்களை எடுத்துச் செல்லவிருப்பதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
சரியான காலத்தில் வெளியிடப்பட்ட ரயில்வேயின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள இந்நிறுவனம், இதன் மூலம் தங்கள் வணிகம் மீண்டும் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மே மூன்றாம் தேதி ஊரடங்கு முடியும் வரை இ காமர்ஸ் நிறுவனங்கள் மளிகை, சுகாதாரம், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிலிருந்து படிப்பதற்கும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் தேவையான பொருட்களின் பட்டியலை இதில் சேர்க்கக் கோரி அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- மோடி