இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், நோக்கியாவுடன் ரூ.7636 கோடியில் நீண்டகாலம் நீடிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கிராமப்புறங்களில் 4ஜி சேவையை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் மக்களுக்கு 5ஜி சேவையை அளிப்பதற்கும் நாட்டின் ஒன்பது மண்டலங்களில் மூன்று லட்சம் ரேடியோ யூனிட்கள் நிறுவும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்காசியாவின் ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் பேசுகையில், ''ஏர்டெல் - நோக்கியா ஆகிய இரு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக ஒன்றாக வேலை செய்துவருகின்றன.
5ஜி தொழில்நுட்பத்திற்காகத் தயாராகிவரும் இந்த நேரத்தில், எங்கள் நிறுவனத்தின் திறனை வலுப்படுத்த நோக்கியாவின் எஸ்.ஆர்.ஏ.என். (SRAN) தயாரிப்புகளைப் பயன்படுத்துவது எங்களை மேலும் வலுவாக்கியுள்ளது'' என்றார்.
நோக்கியாவின் எஸ்.ஆர்.ஏ.என். தயாரிப்புகள், 2ஜி 3ஜி 4ஜி நெட்வொர்க்குகளுக்கான சிக்கலைத் தீர்க்கும். மேலும், செயல்திறனை அதிகரிப்பதோடு எதிர்கால முதலீடுகளுக்கான தீர்வாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
அதேபோல் இந்த ஒப்பந்தம் பற்றி நோக்கியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜிவ் சூரி, ''ஏர்டெல் நிறுவனத்துடன் மிக நீண்ட காலமாக ஒன்றாகப் பணியாற்றிவருகிறோம். அந்த உறவு அடுத்தக்கட்டத்திற்குச் சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போதைய ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவதோடு, எதிர்காலத்தில் 5ஜி சேவைக்கான அடித்தளமாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜியோவில் ஃபேஸ்புக் முதலீடு செய்ய உண்மையான காரணம் இதுதானா?