ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் உட்சபட்ச போர் பதற்றம் நிலவிவருவதால், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானங்கள் ஈரான் வான்வெளியைத் தவிர்த்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பும் விமான குழுவின் பாதுகாப்பும்தான் முக்கியம். தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால், ஏர் இந்தியா விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தற்காலிகமாக ஈரானிய வான்வெளியில் செலுத்தப்படாது.
மாற்றுப்பாதையில் செலுத்தப்படுவதால் டெல்லியிலிருந்து செல்லும் விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரையும், மும்பையிலிருந்து செல்லும் விமானங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் வரையும் அதிக நேரம் பறக்கும்" என்றார்.
முன்னதாக, ஈரான், ஈராக் வான்வெளியை தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தியது. ஏர் இந்தியா நிறுவனத்தை போல இண்டிகோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் ஈரானிய மற்றும் ஈராக் வான்வெளியை தவிர்க்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் ஆணையமும் ஈரான், ஈராக் நாடுகள் மீது பறப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத்தின் உலகப் புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா!