வாராக்கடன் பிரச்சினையாலும், நிதி நெருக்கடியாலும் சிக்கித் தவித்த தனியார் துறை வங்கியான யெஸ் வங்கியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. 30 நாட்களுக்கு வங்கி நடவடிக்கை முழுவதையும் ரிசர்வ் வங்கியே கையாளும் எனவும், வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இதனால் அவ்வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. வங்கி விரைவில் திவால் ஆகிவிடும் என்று அஞ்சிய வாடிக்கையாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை எடுக்கத் தொடங்கினர். ஆனால், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துவைத்துள்ள பணத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உறுதியளித்தன.
மார்ச் 18ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் தகர்த்தப்பட்டு இயல்பு நிலையில் யெஸ் வங்கி செயல்படும் எனவும், ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனை தொடர்ந்து யெஸ் வங்கியின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக அவ்வங்கியின் தலைமை அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக வங்கியில் வாடிக்கையாளர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ளார் என்றும், பணம் எடுபவர்களை விட, டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மேலும் குறையும்