டெல்லி: 722 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முறை வலையமைப்புத் தளமான லிங்க்ட்இன், ஒவ்வொரு நிமிடமும் மூன்று பேர் பணியமர்த்தப்படுவதை உறுதிசெய்கிறது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும், லிங்க்ட்-இன் தளத்தின் புதிய அம்சங்கள் மூலம் கிட்டத்தட்ட 40 மில்லியன் வேலை தேடுபவர்கள் எளிதாக வாய்ப்புகளை அணுக உதவுகின்றன என்று கூறினார் சத்யா நாதெல்லா.
தொடர்ந்து பேசிய அவர், அதிகமான தொழில் வல்லுநர்கள் தங்கள் அறிவு மூலதனத்தை அதிகரிக்க லிங்க்ட்இன் தளத்துக்குத் திரும்புகின்றனர் என்றும், ஒவ்வொரு வாரமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள் எனவும், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
எங்கள் மிக முக்கியமான மறுவடிவமைப்பு, நெறிப்படுத்தப்பட்ட தேடல், செய்தியிடல் அனுபவம் ஆகியவற்றை கதைகளுடன் இணைக்கும் வழிகளையும், அதனை பகிர்வதற்கான புதிய வழிகளையும் லிங்க்ட்-இன் தளத்தில் தொடங்கியுள்ளோம் என்றும் கூறினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் செப்டம்பர் மாதம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத புதிய வடிவமைப்புடனும், அம்சங்களுடனும் தனது புதிய பதிப்பை வெளியிட்டது. ஸ்னாப்சாட் போன்ற கதைகள், ஜூம், ப்ளூஜீன்ஸ் போன்று குழுக்களுடன் காணொலி நிகழ்வுகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட தேடல் அமைப்புகள் எனப் பல அம்சங்களுடன் லிங்க்ட்-இன் தளத்தின் புது பதிப்பு வெளியாகியிருந்தது.