காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சீனா பொருள்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
2020ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சீனா ஸ்மார்ட்போன்களின் விற்பனை குறிப்பிடதக்க அளவில் குறைந்தாலும், இதே காலகட்டத்தில் இந்தியாவில் விற்பனையான மூன்றில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீன எதிர்ப்பு மனநிலை காரணமாக பெரிதும் பலனடைந்தது தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம்தான். மார்ச் வரையிலான காலாண்டில் 16 விழுக்காடுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சாம்சங் நிறுவனம், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 26 விழுக்காடுடன் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து சி.எம்.ஆர் நிறுவனத்தின் தொழில்துறை குழுவின் மேலாளர் அமித் சர்மா கூறுகையில், "சாம்சங் வரவிருக்கும் காலாண்டுகளில் அதன் சந்தை செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும், நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்து சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் போட்டிபோட முடியுமா என்பதைப் பொறுத்திருந்ததுதான் வேண்டும். வரும் காலாண்டுகள்தான், இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும்" என்றார்.
இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் மாதம் 81 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடகக் குறைந்துள்ளதாக கவுண்டர் பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில், இந்தியாவில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை என்பது சுமார் 51 விழுக்காடு குறைந்துள்ளது.
அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வெறும் 1.8 கோடி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதம் ஒரு ஸ்மார்ட்போன்கூட விற்பனையாகவில்லை.
சீன நிறுவனமான சியோமி அதிகபட்சமாக 29 விழுக்காடு சந்தையைத் தன்வசம் கொண்டுள்ளது. அதேபோல, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற சீன நிறுவனங்களான ரியல்மி 11 விழுக்காடும், ஓப்போ ஒன்பது விழுக்காடும் கொண்டுள்ளன.
நோக்கியா ஸ்மார்ட்போனின் விற்பனையும் குறைந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் டாப் 10 ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் எட்டாவது இடத்தில் தொடர்கிறது. சமீபத்தில், வெளியான ஐபோன் SE (2020) வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமிக்கு அதன் ரெட்மி 8 ஏ டூயல், ரெட்மி 8 மற்றும் ரெட்மி நோட் 8 ஆகிய மாடல்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.
அதேபோல சாம்சங் நிறுவனத்தைப் பொறுத்தவரை கேலக்ஸி எம் 11, ஏ 21 எஸ் மற்றும் ஏ 31 ஆகியவை அதிகளவில் விற்பனையாகியுள்ளன.
இதையும் படிங்க: ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 9!