தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களிலும் நேற்று முதல், அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ”உணவகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் வெப்பமானி கொண்டு தினமும் சோதனை செய்ய வேண்டும், சமையலறையில் உணவு தயாரிப்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் தலையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.’
தகுந்த இடைவெளியை பின்பற்றி 50% இருக்கைகள் மட்டும் கொண்டு செயல்பட வேண்டும். உணவருந்தும் அனைத்து மேஜைகளிலும் கை கழுவும் திரவம் அவசியம் வைத்திருக்க வேண்டும். வேலை செய்யும் அனைவரும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளவேண்டும்.
சுகாதாரமான முறையில் உணவு பரிமாற வேண்டும். உணவருந்த வரும் பொதுமக்களுக்கு தகுந்த இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.