திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இங்குள்ள நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகள் அனைத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததிலிருந்து இன்று வரை தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சுகாதார பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொடைக்கானல் நகராட்சி சார்பாக காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த காய்கறி தொகுப்பினை குப்பை அள்ளிய லாரிகளில் கொண்டு வந்து வழங்கியுள்ளனர். ஊரின் குப்பையை போக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு துர்நாற்றம் வீசும் குப்பை வண்டியில் காய்கறி எடுத்து வரப்பட்டது தூய்மைப் பணியாளர்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் நகராட்சி ஆணையர் மூலம் கொடுக்கப்பட்ட காய்கறிகள் குப்பை லாரியில் வந்தது அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தங்களது நகரின் தூய்மையை உறுதிப்படுத்தும் தங்களுக்கு குப்பை லாரியில் காய்கறி தொகுப்பு எடுத்து வந்த சம்பவம் இவர்கள் எங்களை பார்க்கும் பார்வையின் பிரதிபலிப்பாகவே உள்ளது என தூய்மைப் பணியாளர்கள் குமுறுகின்றனர்.