உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் கல்வித் துறையும் முடங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டிருந்தார்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மதச் சார்பின்மை (Secularism) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.
12ஆம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து சமகால உலகின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள் மற்றும் பிராந்தியம் குறித்த விழைவும், திட்டமிடப்பட்ட வளர்ச்சி என்ற பாடத்திலிருந்து இந்திய பொருளாதார வளர்ச்சியின் தன்மை மாற்றம், ஐந்தாண்டு திட்டங்கள், திட்ட ஆணையம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
மேலும் 9ஆம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள், கட்டமைப்பு மற்றும் பொருளாதார பாடத்தில் இருந்து இந்திய உணவு பாதுகாப்பு குறித்த பகுதி நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல 10ஆம் வகுப்பில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம், பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டன. இவ்வாறு பள்ளிக் கல்வியில் படித்து அறிந்துக்கொள்ளவேண்டிய அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களையும் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இதனை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்கள், திரையுலகப் பிரபலங்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘கல்வியில் அரசியல் வேண்டாம் அரசியலில் கல்வி கற்போம்’ என உருட்டும் அமைச்சருக்குக் கூட்டாட்சியும், மதச்சார்பின்மையும்தான் அரசியல் என்பது தெரியாதோ. போலிகளுக்கு எல்லா நேரமும் கட்டைவிரல்கள் கிடைத்திடாது.
சமயத்தில் கலைஞர் சொன்னது போல் பட்டை தான் உரியும். அப்போது அறவே படிக்காதே என்றவர்கள் இப்போது 11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் இதை இதைப் படிக்காதே என்கிறார்கள்.
மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது. குடியுரிமை, கூட்டாட்சி, மதச்சார்பின்மையோடு, வாய்க்கு வாய் பேசும் தேசியவாதமும் கூடாதாம்" என கூறியுள்ளார்.
அண்மைக்காலங்களாக அரசின் பல்வேறு திட்டங்கள் எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இளைய தலைமுறையினரிடம் அரசியலை பிரிக்கும் எண்ணத்தில் பாடத்திட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.