திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முறையாறு பாலம் அருகேயுள்ள சென்னை உணவகத்தில் நேற்று (ஜூலை 12) காலை இளைஞர்கள் நால்வர் ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
அதேபோல் கோயில் உண்டியலை உடைத்துத் திருடி உள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்தக் காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை செங்கம் காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு(ஜூலை 12) செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வலையாம்பட்டு அருகே இரவு நேரங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அதில் சக்திவேல், அஜய், முருகன் ஆகிய மூவரும் உணவகத்தில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அதே சமயம் ராஜேஷ் என்ற நபர் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் மணல் கடத்தல்: 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல்!