தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 10) மனு ஒன்றை அளித்தனர்.
அதில், "கோவை வெடிகுண்டு வழக்கு மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.
நன்னடத்தை அடிப்படையில் தலைவர்களின் பிறந்த நாளன்று பல சிறைவாசிகள் விடுவிக்கப்படும் நிகழ்வு நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று 10 ஆண்டுகள் சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்.
தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும். மிகப் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வசதி படைத்தவர்களை அரசு விடுதலை செய்கின்றது. அதேபோல் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றங்களை செய்துவிட்டு சிறையில் தங்கள் இளமை காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.