கரோனா நோய்ப்பரவலால் கடந்த மார்ச் 24 முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றவர்கள் என அரசு அறிவித்தது. மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுவது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேனி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக பருவத்தேர்வுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக இன்று (ஜூன்12) ஏராளமான மாணவ - மாணவியர்கள் கூடியதால், கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் அமைந்துள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. இங்கு இளங்கலை பட்டப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், கணிப்பொறி அறிவியல், வணிக நிர்வாகம் ஆகிய ஏழு பிரிவுகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் முதுகலை பட்டப்பிரிவில் ஆங்கிலம், பொருளாதாரம், கணிப்பொறி அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர். இவர்களில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ - மாணவியர்களை தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று (ஜூன்12) ஒரே நாளில், சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் கல்லூரியில் கூடியுள்ளனர். கட்டணம் செலுத்தும் அறையிலும், கல்லூரி வளாகத்திலும் மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூடியிருந்தனர்.
மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி மருந்து, உடல் வெப்பநிலை பரிசோதனை என எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. மேலும் முதல்வர், துறைத்தலைவர்கள் யாருமின்றி அலுவலகப்பணியாளர்களே கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவ - மாணவியர்கள், பணியாளர்கள் எனப் பலருக்கு நோய்த்தொற்று உண்டாகும் அபாயம் உள்ளது.
கல்லூரிகளுக்கான தேர்வு நடைபெறுமா என்ற ஐயப்பாடு நிலவும் சூழலில் நோய்த்தொற்று ஏற்படும் வகையில் மாணவர்களிடம் தேர்வுக்கட்டணம் வசூல் செய்த கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.