தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் கு.குமரேசன், "கரோனா நோய்ப் பரவல் தடுப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றி முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், புலம்பெயர் தொழிலாளர் நலன், பொது மக்கள் நலன் என தன்னலம் கருதாமல் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களில் பலருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தடுப்பு பணியின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணியும் வழங்க வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதைப் பரிசீலனை செய்து விரைவில் ஆணைகள் வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்தார்" என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முருகையன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.