இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சிறைத் துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறைகள் தண்டனை அனுபவிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகுப்பதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் இடமாகவும் உள்ளது.
பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு மட்டுமல்லாமல் கைதிகள் தங்கள் உறவினர்களோடு போனில் பேசுவதற்கும் தற்போது வசதிகள் உள்ளன. இதுபோன்ற நல்வாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு சிறைத் துறையின் பெயர் மாற்றம்செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனிமேல், சிறைத் துறையானது சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை என்று அழைக்கப்படும். மேலும், இதன் தலைமை அலுவலரும் இனிமேல் சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி.) என்றே அழைக்கப்படுவர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை என்பது பெயர் மாற்றத்தின் ஆங்கில பெயரின், தமிழ் மொழிப்பெயர்ப்பாக சொல்லப்படுகிறது. தற்போது, அந்த ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ் வார்த்தைக்காக தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சிறைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.