தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பிரேமா(28). இவருக்கு மாற்றுத்திறனாளி முருகன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் காவலராக தேர்வாகிய பிரேமா கடந்த மார்ச் மாதம் முதல் திருச்சியில் உள்ள காவலர் பயிற்சியகத்தில் காவல் பணியாளருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் இவர் பங்கேற்று கைதானவர் என்ற விபரம் க்யூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்தது.
கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அரசுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள பிரேமா தனது உறவினர்களுடன் தடுப்புக்காவலில் பலமுறை வைக்கப்பட்டிருந்ததும், அவ்வாறு கைதாகும் போது தனது பெயரை கலைமணி என்று தொடர்ச்சியாக பதிவு செய்தும் வந்துள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர் மீது குமுளி, கம்பம் (வடக்கு) மற்றும் உத்தமபாளையம் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விபரம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை குறித்த உண்மைத் தன்மையை மறைத்து தமிழ்நாடு காவல்துறையில் காவலராக தேர்வாகி பயிற்சியில் இருந்த பிரேமாவை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் தேனி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.