கோவையை அடுத்த வடவள்ளி பகுதி சோமயம்பாளையத்தில் பி.எஸ். பி.பி மில்லினியம் (PSBB) சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் படி பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது அந்தப் பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து வாட்ஸ்அப் குரூப் ஒன்றை தொடங்கி உள்ளனர்.
அந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஆன்லைன் வகுப்புகள் என்பது வீணான ஒன்று பயனற்றது என்று சில பெற்றோர் தகவல் பரிமாறி வந்த நிலையில் அந்த குறிப்பிட்ட பெற்றோரின் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து அப்பள்ளி நிர்வாகம் நீக்கம் செய்துள்ளது. இதற்கு அம்மாணவர்களின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அருணா கூறும்போது, "பள்ளி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்கம் செய்துள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படும் " என்றார்.