இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 215ஆவது நினைவு தினம், ஆடிப்பெருக்கு தினமான நாளை(ஆக.2) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில், ஓவ்வொரு ஆண்டும் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் மாலையணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்தாண்டு கரோனா பரவலை முன்னிட்டு நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட போதும், தீரன் சின்னமலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில் அறச்சலூர் ஓடாநிலை தீரன் சின்னமலை நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் இன்று(ஆக.1) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "முதலில் அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். அதன்பிறகு மாலையணிவித்து மரியாதை செலுத்தவிருக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை அனுமதி கேட்டுள்ள 35 அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்திட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டம் சேர்க்காமல் 5 பேர் மட்டுமே வந்து அமைதியான முறையில் மாலையணிவித்து மரியாதை செலுத்திட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நடவடிக்கைகளுக்கும், கரோனா பரவல் நடவடிக்கையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள கட்டுப்பாடுகளுக்கும் அனைத்துத் தரப்பினரும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்" என, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.