கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சிக்கு நேரடியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாளை (ஜூலை 9) மாலை 6.55 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு இந்த சிறப்பு விமானம் திருச்சி வரவுள்ளது.
அதேபோல், ஜூலை 11ஆம் தேதி மதியம் 3.55 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் அன்று மாலை 5.45 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. மேலும், வரும் 12ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு சிங்கப்பூரில் புறப்படும் விமானம் இரவு 8.50 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.