திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சுமார் 5 கி.மீ., தொலைவில் வில்பட்டி சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாகும். இங்கு விளையக்கூடிய காய்கள், பழங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்தைப்படுத்தப்படுகிறது. தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக, கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா தடைபட்டுள்ளது.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி, பிரதான சாலைகள் அனைத்தும் ஆரவாரம் இன்றி காணப்படுகிறது. இந்நிலையில் வில்பட்டி பிரதான சாலை ஓரங்களில் புதர்கள் மண்டி சாலை குறுகிய நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே, லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்தில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போதிய பராமரிப்பின்றி சாலைகளை ஆக்கிரமித்து செடிகள் வளர்ந்துள்ளன. இரவு நேரங்களில் காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் புதர்களை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.