ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஐபிஎல் கிரிக்கெட்டின் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தாரைவார்த்தது.
150 இலக்குடன் ஆடிய சென்னை அணியில், ரெய்னா, தோனி, ராயுடு, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் கையை விரித்தனர். இருப்பினும், இப்போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன், இறுதி ஓவர் வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 80 ரன்கள் அடித்து, தனது பேட்டிங் குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடித் தந்தார்.
இதனிடையே, இப்போட்டியில் வாட்சன் ரத்தக்காயத்துடன் ஆடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவியது. இந்த புகைப்படம் குறித்து அவரது சக வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வாட்சனின் காலில் ரத்தம் வருவதை கவனித்தீர்களா மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரன் ஓடும்போது, வாட்சன் டைவ் அடித்ததால் அவரது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் சொல்லாமல் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். போட்டி முடிந்த பின்னர் அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
ரத்தக்கரையுடன் வாட்சன் ஆடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதுமட்டுமின்றி, ரத்தக்கரையுடன் வாட்சன் வெளிப்படுத்திய போராட்ட குணத்தைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாது மற்ற அணி ரசிகர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.