தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணை கைதியாகயிருந்தபோது உயிரிழந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு உதவி ஆய்வாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தார். மற்ற அனைத்து காவல்துறையினரையும் அந்த காவல் நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்றக் காவலில் தந்தை, மகன் உயிரிழந்த இச்சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், செல்போன் கடை உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருத்துறைப்பூண்டியில் 30-க்கும் மேற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து, புதிய பேருந்து நிலையம் அருகில் உயிரிழந்த இருவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், வர்த்தக சங்க உறுப்பினர் செல்வகுமார், செல்போன் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தந்தை-மகன் மரணம்: ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடையடைப்பு