தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்த்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்துவந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, நேற்று சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டில் அவர்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், சாத்தான்குளம் மருத்துவமனை மருத்துவர், மருத்துவமனை ஊழியர்களிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணைசெய்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது உள்ளே இருவரும் தாக்கப்பட்டதாக புகார் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சிபிஐ கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வுசெய்தது. அப்போது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நின்ற இடத்திற்கும் காவல்நிலையத்திற்கும் உள்ள தூரம் ஆகியவற்றை கணக்கிட்டு சிபிஐ அலுவலர்கள் வீடியோ பதிவு செய்துகொண்டனர்.