தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன், திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது பல்வேறு தேவாலயங்கள், மசூதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக கரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் உதவித்தொகை சரிவர கிடைப்பதில்லை அதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய் தயாரிப்பு பிரபலமானது என்பதால் அங்கேயே வர்த்தக மையம் அமைப்பதற்கு கருத்துரு அனுப்பி இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 84ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடனுதவியை ஆணைய தலைவர் வழங்கினார்.
கூட்டத்துக்குப் பிறகு ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "சிறுபான்மையினர் ஆணையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக, இந்தக் கரோனா காலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்னென்ன மாதிரி புதிய கடன் திட்டங்கள் வழங்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன்.
சாத்தான்குளம் விவகாரத்தில் சிறுபான்மை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. தங்கள் இல்லத்தில் நடந்த சம்பவம் என்ற அடிப்படையில்தான் எல்லோரும் இந்த விவகாரத்தில் கரிசனை காட்டினார்கள். முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெகுவாக பாராட்டியுள்ளது. சிபிசிஐடி, சிபிஐ அலுவலர்கள் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நீதி கிடைக்கும் அரசு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
சிறுபான்மையினர் ஆணைய தலைவர் என்ற முறையில் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறை துணைத் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். வரும்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளோம். விசாரணை சரியான அடிப்படையில் சென்று கொண்டிருப்பதால் தேவைப்படும் பட்சத்தில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்தார்.