மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடனை தள்ளுபடி செய்துவிட்டு, வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, மாதர் சங்கத்தினர் கூறுகையில், "மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடனை தள்ளுபடி செய்துவிட்டு வட்டியில்லா கடன் வழங்கவேண்டும், கரோனா கால நிவாரண நிதி குடும்பங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை ரேசன் கடைகளில் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்." என்று தெரிவித்தனர்.
நங்கவள்ளி பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜு.கவிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.ராஜாத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி தலைமையில் இரண்டு இடங்களில் , வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.