கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி. குறிப்பாக, 1996 இல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 37 பந்துகளில் சதம் விளாசினார். இதனால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அப்போது அஃப்ரிடியின் வயது 16 என்றும் கூறப்பட்டது. இதன் மூலம், இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார். இந்த சாதனை 17 வருடங்களுக்கு பிறகுதான் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்காக 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய அஃப்ரிடி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பலமுறை அறிவித்தும், மீண்டும் தனது அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். இதனால், இவரது உண்மையான வயது என்னவாக இருக்கும் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையை குறித்து அவர் கேம் சேஞ்சர் என்ற சுயசரிதைப் புக்கத்தை எழுதியுள்ளார். அதில் தனது உண்மையான வயதுக் குறித்தும் அவர் குறிப்பட்டுள்ளார். அவர்கள் சொல்வது போல் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசும் போது எனக்கு வயது 16 அல்ல, 19 ஆக இருக்கும் என குறிப்பிட்டார். நான் 1975இல் பிறந்ததுதான் உண்மை எனவும் குறிப்பிட்டார்.
அஃப்ரிடி 1975இல் பிறந்திருந்தால், அந்த சாதனை படைக்கும் போது அவரது வயது 20 அல்லது 21ஆக இருக்க வேண்டும். மேலும், தனது கிரிக்கெட் பயணத்தை குறித்தும் அவர் அந்த சுயசரிதையில் குறிப்பட்டுள்ளார். தற்போது, அஃப்ரிடி தனது உண்மையான வயதைக் கூறியதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவர் படைத்த இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், அந்த சாதனைக்கு சொந்தக்காரராக ஆப்கானிஸ்தான் இளம் வீரர் உஸ்மான் கானி திகழ்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை அஃப்ரிடியின் பிறந்தநாள் பல்வேறு தரவுகளிலும் மார்ச் 1, 1980 என்றுதான் பதிவாகியுள்ளது.