கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட அய்யர்மலையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற இரத்தினகிரீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆயிரத்து 178 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு பக்தர்கள் ஆயிரத்து 117 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இதனால், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியோர்கள் படி வழியாக மலை ஏறி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது.
இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆறு கோடியை 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பிவட ஊர்தி (ரோப்கார் - Rope car) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று சோதனை ஓட்டம் செய்யப்பட்ட பிறகு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல்ரகுமான் ஊராட்சிக்குழுத்தலைவர் கண்ணதாசன், இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் சூரியநாரயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோயில் பராமரிப்புப் பணி தொடக்கம்!