கரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சிகிச்சை மையம் ஜுலை 7ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
தற்போது 200 பேர் கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை நேரடியாக கண்காணித்துவருகிறது.
மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கொடிசியா மையத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவ்வாறு வெளியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் நோயாளிகள் இறக்கி விடப்பட்ட பின்னர் அவர்களை அழைத்து வந்த மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் முழுக்கவச உடை எந்த ஒரு பாதுகாப்புமின்றி அங்கேயே வீசப்படுவதால் அதன் மூலம் தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் கரோனா நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் அருகே கிடந்த பயன்படுத்தப்பட்ட முழுக்கவச உடையை தெருநாய் ஒன்று எடுத்துக் கொண்டு சென்றது.
பின்னர் அந்த பாலிதீன் கவரை தனது உடல் முழுவதும் சுற்றிக் கொண்டதால் அந்த நாய்க்கு இதன்மூலம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த நாய் வெளியே செல்லும்போது அதன் மூலம் பலருக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உடனடியாக சிகிச்சை மையம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும்.
தெருநாய் உள்ளிட்ட வேறு எந்த விலங்குகளும் உள்ளே வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்படவேண்டும். பயன்படுத்தப்பட்ட முழுக்கவச உடைகள் முறையாக அழிக்கப்பட வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட முழுக்கவச உடைகளை அழிக்க தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ள நிலையில் கவனக்குறைவாக இதுபோன்று வெளியே வீசுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்கள் இதில் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரியரில் வந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய உயர் ரக போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது!