உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றைக் குணப்படுத்த உலகளவில் இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதற்காக remdesivir, tocilizumab, enoxaparin ஆகிய மருந்துகள் தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர், சென்னை கரோனா தடுப்புச் சிறப்பு அலுவலருமான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, அந்த மருந்துகள் சென்னையில் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும், அவை நல்ல பலனைப் கொடுப்பதாகவும் கூறினார்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாமானியர்கள் உள்பட பலரும் பொருளாதார ரீதியாக பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் மருந்துகள் மூலம் கரோனா தொற்றுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.