உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22ஆவது லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தனர். 136 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24ஆவது சதத்தை எட்டினார். 113 பந்துகளில் 14 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 140 ரன்கள் எடுத்திருந்த ரோகித் ஷர்மா, ஹசான் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வந்த ஹர்திக் பாண்டியா 26 ரன்களிலும், தோனி ஒரு ரன்னுடனும் நடையைக் கட்டினார்.
இந்திய அணி 46.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகவும் வருத்ததில் உள்ளனர்.
கேப்டன் கோலி 71 ரன்களுடனும், விஜய் சங்கர் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமிர் இரண்டு விக்கெட்டுகளையும், ஹசான் அலி, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.