கரோனா ஊரடங்கினால் பள்ளிகள் எதுவும் திறக்கக் கூடாது என்றும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்திக்கொள்ள எவ்வித தடையும் இல்லை என்றும் அரசு கூறியிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல பள்ளிகள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. கோவையிலும் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு ஒருபுறம் பெற்றோர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் ஆதரவு அளிப்பதில்லை. எனினும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டுதான் வருகின்றன.
ஆனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணத்தை தருவதற்கு மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களாக பணி புரியும் பலரும் சம்பளமின்றியே ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணத்தை பெற்றோர்களிடம் கேட்டால் பல பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே பெற்றோர்களிடம் ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணத்தை பெறுவதற்காக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அரசு கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடமிருந்து பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்தினால்தான் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியுமென்று கல்வி நிர்வாகம் கூறுகிறது. இல்லையெனில் அது தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கக் கூடும் என்றும் தனியார் கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.