அரசு மதுபான கடையைத் திறக்க பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்துவருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் அரசு மதுபான கடையை திறக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "எங்கள் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவந்த அரசு மதுபான கடை கடந்த ஜூலை மாதம் தாற்காலிகமாக மூடப்பட்டது.
மூடப்பட்ட கடை மாற்று இடத்தில் திறக்க காலதாமதமாவதால் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம், அந்நிய மாநில மதுபாட்டில்கள் விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுவருகிறது.
மேலும் அருகிலுள்ள ஆயந்தூர் மதுபான கடைக்குச் செல்லும்போது வழியில் உள்ள இரண்டு ஊர்களை கடந்துசெல்ல வேண்டியுள்ளது.
இதனால், இந்த இரண்டு ஊர் மக்களுக்கும், எங்களுக்கும் சாதி சண்டை ஏற்படும் இடர் உள்ளது.
இதேபோல், அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்துவருகின்றன. எனவே இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க எங்கள் பகுதியில் மூடப்பட்ட மதுபான கடையை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.