பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவதற்கான மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பில் மஹாவீர் சிங்வி பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் ஆதரவாளரும், உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதன் ஊற்றுக்கண்ணும், பயங்கரவாதத்தின் தொட்டிலுமாக பாகிஸ்தான் விளங்குகின்றது. அத்தகைய நாடு இந்த மன்றத்தில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தனது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக பின்னடைவை உருவாக்குவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 2008 மும்பை தாஜ் விடுதி தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த பயங்கரவாதிகள் தொடர்பான பல ஆதாரங்களை இந்தியா பகிர்ந்து கொண்டாலும், அவற்றின் மீது உறுதியான நடவடிக்கைகளை அந்நாடு இன்று வரை எடுக்கவில்லை. இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 1267 பேர் மனித உரிமை ஆணையக் குழுவால் தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் விருந்தோம்பலை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
அத்துடன், எல்லை பயங்கரவாதத்திற்கு ராணுவ, நிதி மற்றும் தளவாட ஆதரவை தொடர்ந்து அளித்து வருகிறது. கிறிஸ்தவர்கள், அஹ்மதியாக்கள், சீக்கியர்கள், இந்துக்கள், ஷியாக்கள், பஷ்டூன்கள், ஹசாராக்கள், சிந்திகள் மற்றும் பலோச்சிகள் உள்ளிட்ட சிறுபான்மையினரை முறைப்படுத்தப்பட்ட வகையில் துன்புறுத்தியதாக அந்நாட்டின் மீதான புகார்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைதி நாடாக தோற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கேலிக்குரியது.
கடுமையான சட்டங்கள், கட்டாய மதமாற்றங்கள், கட்டாயத் திருமணங்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் என இது போன்ற அடக்குமுறைகளும், அநீதிகளும் மேற்கண்ட மதங்களை ஏற்றவர்களுக்கு அங்கே இழைக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. அது தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும். பாகிஸ்தான் அதை அடைய விரும்புவதை நிறுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்திய ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகம் ஒரு குடும்பம் என்பதே இந்தியாவின் உலகத் தத்துவம். கலாசாரம், மொழியியல் மற்றும் மத பன்முகத்தன்மை எங்கள் பலம். எங்கள் அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது" என்றார்.