விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தாணிப்பாறை, பட்டுப்பூச்சி, அத்திகோவில், நெடுங்குளம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைக்குள் இருக்கும் மூலிகைகள், கிழங்கு வகைகள் உட்பட பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து வருவது, இவர்களின் பிரதானத் தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் இன மக்களுக்கு மலைக்குள் சென்று நன்னாரிவேர், தேன், நெல்லிக்காய், கடுக்காய், சாம்பிராணி, கிழங்கு வகைகள் உட்பட 14 வகையானப் பொருட்களை எடுப்பதற்கும்; மலைப் பகுதிகளில் சென்று கால்நடைகள் மேய்ப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் ஊரடங்கு காலத்தில், மலைவாழ் மக்களை வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மீறி செல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்லாமல், கடந்த ஒரு வாரமாக வாழ்வாதாரம் இல்லாமல், உணவிற்கே வழியின்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில் நேற்று (ஜூன் 17) விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் ஷபாப் தலைமையில் மலைவாழ் மக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் மலைவாழ் மக்கள் மலைக்குச் சென்று 14 வகையான பொருட்கள் எடுக்கத் தடை இல்லை எனவும், மலைப் பகுதிகளுக்குள் மாடுகளை மேய்ப்பதற்குத் தடை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் சார் ஆட்சியர் தினேஷ்குமார் மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் இடம் ஏற்படுத்தி தரப்படும் என மலைவாழ் மக்களிடம் உறுதியளித்தார்.